தலைப்பைப் பார்த்தவுடன் ஜானகிராமனின் விசுவாச கோடிகள் என்னைத் தொலைத்துக் கட்ட கங்கணம் கட்டிக்கொண்டு வரப்போகிறார்கள். சமீபமாக முகநூலில் ஜானகிராமனின் இரண்டு நாவல்களை குற்றியிரும் குலையுயிருமாக நையப்புடைக்கிறாகள். ஒன்று அம்மா வந்தாள்,
இன்னொன்று மரப்பசு.
பிறழ்வுகளைப் பேசும் படைப்புகளை நியாயப்படுத்தி தங்களை முற்போக்குவாதிகளாக்க் காட்டிக் கொள்வது ஒருவகையான
fashion. இவ்வளவு நேர்த்தியாக பெண்கள் பற்றியும் அவர்கள் தனித்தன்மை பற்றியும் தனது படைப்புகளில் பேசிய தி.
ஜா தனது மகள் கலப்புத் திருமணம் செய்ததை ஒப்புக்கொள்ளவில்லை என்பதை அவர் மகள் உமா மஹேஸ்வரி ஒரு நேர்காணலில் சொல்லி இருக்கிறார். So what we speak, most of the time, is not
exactly we want to follow.
காலங்காலமாக பெண்ணியப்பார்வையிலும் பெண்களின் சுதந்திரப்போக்கையும் மையமாக வைத்து வெகுவாக விவாதிக்கப்பட்ட, பலராலும் பெரிதும் சிலாகிக்கப்பட்ட நாவல் வரிசையில் தி.
ஜாவின் மரப்பசுவும் ஒன்று. அவர் எழுதிய பல சாகாவரம் பெற்ற நாவல்களில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள மூன்றே நாவல்களில் இதுவும் ஒன்று. கல்லூரி நூலகத்தில் இதனுடைய ஆங்கில மொழிபெயர்ப்பைப் பார்த்திருக்கிறேன்.
“Wooden Cow” என்ற தலைப்பில் லக்ஷ்மி கண்ணன் மொழி பெயர்த்திருப்பார். ஆங்கிலத்தில் வந்திருக்கும் மற்ற இரண்டு நாவல்கள் அம்மா வந்தாள் மற்றும் செம்பருத்தி.
மொழிபெயர்ப்பாளர்கள் பெயர் நினைவில்லை. மோகமுள்ளை இதுவரை யாரும் ஆங்கிலத்தில் முயற்சிக்கவில்லையா அல்லது தற்போதைய விற்பனை இலக்கியமாக மாறுவதற்கு அதற்குத் தகுதி இல்லையா தெரியவில்லை.
வாட்ஸப்பிலும் சமூக ஊடகங்களிலும் தங்களது தனிப்பட்ட பிரச்சினையை
quotes மாதிரி வைத்து சம்பந்தப்பட்டவர் தான் நினைப்பதைப் பார்த்து தெரிந்துகொள்ளட்டும் என்று ஒருவர் நினைப்பதைப்போன்ற ஒரு மனநிலையில்தான் ஜானகிராமன் மரப்பசு நாவலை எழுதியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவர் எழுதிய அனைத்து நாவல்களையும் படித்தபின்புதான் இந்த மாதிரியான ஒரு எண்ணம் எனக்குத் தோன்றுகிறது. அவருடைய மற்ற பெண் கதாப்பாத்திரங்களைப் போல நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு தைரியமாக வலம் வரும் பெண்ணைப் போல அம்மணி எனக்குத் தோன்றவில்லை.
தன்னை ஏமாற்றிவிட்ட யாரோ ஒரு பெண்ணை intellectual vengeance போல பழிவாங்க இந்த நாவலை எழுதி ஜானகிராமன் தனது ஆதங்கத்தையும் ஆத்திரத்தையும் தீர்த்துக்கொண்டாரோ என்னவோ. ஜானகிராமன் மீது எந்தக்குறையும் இல்லை.
தனக்குத் தோன்றியதை எழுதிவிட்டு அவர் பாட்டுக்கு அமைதியாகத்தான் இருக்கிறார். மரப்பசுவைப் பற்றி அவர் எங்கும் பிரஸ்தாபித்து இருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. நாம்தான் அம்மணி அப்படி அம்மணி இப்படி என்று ஏதோ இல்லாத பிம்பத்தை அந்தக் கதாபாத்திரம் மீது ஏற்றி பெண்ணியத்தையும் பெண் சுதந்திரத்தையும் கோணலான திசையில் புரிந்து கொண்டிருக்கிறோம்.
சிறுவயதில் கணவனை இழந்த பெண்ணொருத்தி மொட்டையடிக்கப் பட்டு வெண்ணிற உடை அணிவிக்கப்பட்டு அலங்கோலப்படுத்தப் படும்போது அதனைப் பார்த்து வெறுக்கும் அம்மணி இந்த மாதிரியான ஒரு சூழலில் தன்னை திணித்துவிடக்கூடாது என்று நினைக்கும் இடத்தில் தனித்து நிற்பது உண்மைதான். ஒரு சமூக அமைப்பில் ஒரு பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதியில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஒன்று அதை மாற்ற வேண்டும்;
மாற்றப் போராட வேண்டும் அல்லது அதற்குக் காரணமான அத்தனைக் காரணிகளிலிருந்தும் தன்னால் முடிந்த அளவு விலகி இருந்து உடல் மற்றும் மனம் இரண்டின்
integrity என்ற விஷயத்தை சமரசம் செய்துகொள்ளாமல் இருக்க வேண்டும்.
ஆனால் அம்மணி செய்தது என்ன? வெறும் பித்துக்குளித்தனம் அன்றி வேறொன்றும் இல்லை.
உலகில் இருக்கும் எல்லோரின் மீதும் வார்த்தைகளால் அன்பு காட்டினால் மட்டும் போதாது, அரவணைத்து ஆற்றுப்படுத்த வேண்டும்;
முடிந்தால் அவர்களை உடலளவில் திருப்திப்படுத்த வேண்டும். மூன்னூறு பெரிடம் அவள் உடலுறவு கொண்டிருக்கிறாள். மூவாயிரம் பேரை கட்டியணைத்து ஆற்றுப்படுத்தியிருக்கிறாள். இங்கு பெண் சுதந்திரமும் பெண்ணுக்குரிய தனித் தன்மையும் எங்கே வெளிப்படுகிறது என்று தெரியவில்லை.
கோபாலி என்பவன் ஒரு கோமாளியாகத்தான் என் கண்களுக்குத் தெரிகிறான்.
கோபாலி என்ற பெயரைத் தேர்ந்தெடுக்கும்போது இவனைப் போன்ற கோமாளிதான் உனக்கு லாயக்கு என்று தனது வஞ்சத்தைத் தீர்த்துக்கொண்டாரோ தி. ஜா. என்பது அவருக்குத்தான் வெளிச்சம்.
இந்தக் கோபா(
மா)லியை இவனை ஆற்றுப்படுத்துகிறாள். அவனுடைய மகள் தன் வயதொத்த பெண் என்ற உண்மை தெரிந்தபோதும் அவனை தன்னுடைய உடலால் ஆற்றுப்படுத்துகிறாள். அவன் மூலம் கிடைக்கும் தொடர்புகள் அனைத்தையும் ஆற்றுப்படுத்துகிறாள். அதாவது எல்லோரும் என்னிடம் வந்து படுத்துவிட்டுப் போங்கள் என்று சொல்லாமல் சொல்கிறாள். பின்னர் வெளிநாட்டில் புரூஸ் என்பவன்….இப்படி பட்டியல் நீளுகிறது.
இன்னொரு கட்டத்தில் தான் தனியாக வீட்டில் விட்டுவிட்டு வந்த மரகதத்தை கோபாலி பதம் பார்த்து விடுவானோ என்று பயப்படுகிறாள். தான் பலரிடம் படுத்தாலும் மரகதம் அப்படி ஆகிவிடக்கூடாது என்று நினைக்கிறாள். இது ஏன் என்று புரியவில்லை. தன்னைப்போல எல்லோரும் இந்த உலகத்தை குறிப்பாக பெண் உடலுக்கு நாயாய் அலையும் அனைத்து ஆண் வர்க்கத்தையும் ஆற்றுப்படுத்தட்டுமே என்று மரகதத்தையும் அந்த வழியில் தள்ளிவிட அவள் ஏன் நினைக்கவில்லை? எங்கோ ஒரு மூலையில் அவளுக்கு உறைத்திருக்கத்தான் செய்கிறது. தான் ஆற்றுப்படுத்தவில்லை. தான் செய்துகொண்டிருப்பது வெறும் உடல் சுகத்துக்குத்தான் என்ற உண்மை அவளுக்கு எங்கோ உறைத்துக்கொண்டுதான் இருந்திருக்கிறது.
அம்மணியை முன்னிலைப்படுத்தி பெண்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு கதாப்பாத்திரம் அவள் என்று விவாதம் புரியும் அனைத்து விமர்சகர்களுக்கும் பெண்ணியத்தைப் புரிந்துகொண்டதாகக் காட்டிக்கொள்ளும் பெண்களுக்கு சில கேள்விகள்.
இந்த சமூக அமைப்பை பார்த்து வெறுப்படையும் அம்மணி அதில் ஏகோபித்த ஆதிக்கம் செலுத்தும் ஆண் வர்க்கத்திற்கு தன்னுடைய உடலை எந்த ஒரு வரைமுறையும் இல்லாமல் எப்படி தாரை வார்க்கத் துணிகிறாள்? இவள் ஆற்றுப்படுத்துவதாக நினைக்கும் ஓர் இனம் ஆண் இனமாக மட்டும் இருப்பது ஏன்? பெண் இனமாக இருக்கலாம்.
சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட பெண்களாகவோ குழந்தைகளாகவோ முதியவர்களாகவோ பிச்சைக்காரகளாகவோ கணவனால் கைவிடப்பட்டவர்களாகவோ இருக்கலாமே.
அது என்ன இவள் உடலை அனுபவிக்கத் துடிக்கும் ஆண்களை மட்டும் வரைமுறை இல்லாமல் ஆற்றுப்படுத்த நினைக்கிறாள். இது வெறும் சுயநலம்தானே.
ஆக தான் ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் ஒருவனிடம் மட்டும்தான் படுக்க முடியும்.
இப்படி கட்டுப்பாடு இல்லாமல் திரிந்தால் கண்டவனிடம் படுக்கும் சுதந்திரம் கிடைக்கும் என்று நினைக்கும் ஒரு விட்டேத்திப் பெண்ணாக ஏன் அவள் இருக்க முடியாது.? அவளுடைய கல்வி, பொருளாதாரம்,
செல்வாக்கு இதையெல்லாம் காரணம் காட்டி அவள் செய்வது உலகை ஆற்றுப்படுத்தவே அன்றி வேறு எதுவும் இல்லை என்று நொண்டிச் சாக்கு சொல்வதும், அவளைப்போல எந்த ஒரு வசதியும் வாய்ப்பும் கிடைக்கபெறாத பெண் ஒருத்தி இப்படி ஆற்றுப்படுத்தக் கிளம்பினால் இவள் என்ன இப்படி அரிப்பெடுத்துப்போய் தேவடியாத்தனம் செய்கிறாள் என்று கிண்டல் செய்வதும் நகைமுரண். பெண்ணியத்தைப் புரிந்து கொள்ளும் விதமே பிறழ்வுகளைச் செய்பவர் யார் என்பதைப் பொறுத்துதான் என்ற போக்கு முற்றிலும் பத்தாம் பசலித் தனமானது;
போலியானது.
ஒரு பெண் தன்னுடைய சுதந்திரமான போக்கைப் பற்றி நினைக்கும்போது தன்னுடைய உடல்கூறைப் பற்றி கொஞ்சம் யோசித்தேயாக வேண்டும்.
அவள் உடல் விதைகளைப் பெற்று விளைவிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. வாங்கிக் கொள்ள ஒரு பெண் தயாரானால் குப்பையைக் கொட்டுவதற்கு இந்த ஆண் இனம் வரிசையில் கால்கடுக்க நிற்கத் தயாராக உள்ளது.
தான் என்ன ஒரு குப்பைத் தொட்டியா என்ற ஒரு உடல் சார்ந்த மற்றும் சமூகம் சார்ந்த பிரக்ஞையும் ஒரு பெண்ணுக்குக் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
பத்து நிமிடங்களில் இழப்பேதும் இன்றி உதறிவிட்டு எழும் ஆண்களின் உடல் கூறு வேறு.
அதை ஏற்றுக்கொள்ளும் பெண் ஒருத்தி பத்து மாதங்கள் சுமக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட வாய்ப்பு உண்டு என்பது பெண் உடல் கூறு.
இந்த நிலையில் எண்ணிலடங்கா ஆண்களை ஆற்றுப்படுத்துகிறேன் பேர்வழியென்று ஒவ்வொருவனிமும் இருந்து குப்பையை தனது உடலுக்குள் வாங்குவது எந்த மாதிரியான பெண் சுதந்திரம் என்று புரியவில்லை.
பெண் என்பவள் ஆண்களின் குப்பைத் தொட்டியல்ல. அம்மணியும் அதைப் புரிந்துகொள்ளவில்லை. அவளைப் புரிந்துகொண்டதாக சொல்லிக்கொள்ளும் எவரும் இந்த உண்மையைப் புரிந்துகொள்ளவில்லை.
மரப்பசுவை ஒரு கதையாகப் படிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
Flaubert’s Madam Bovary மாதிரி, D. H. Lawrance’s
Lady Chatterley’s Lover மாதிரி. பிறழ்வுகளைச் சொல்லும் கதைகளைப் படிக்கும்போது இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் அவர்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்ற படிப்பினை மட்டுமே அந்த மாதிரியான படைப்புகளின் நோக்கமே தவிர எப்படிப்பட்ட பெண்,
பெண் வர்க்கத்திலேயே இப்படி ஒரு பாத்திரப்படைப்பு இருக்க முடியுமா, எல்லோரையும் உடலுறவில் திருப்திப்படுத்த எப்படிப்பட்ட பெருந்தனமையான மனம் வேண்டும் என்று தன் குடும்பம் என்ற ஒரு பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்துகொண்டு வெளியே நடக்கும் பிறழ்வுகளில் நியாயம் தேடுவது வக்கிரத்தின் உச்சம்.
அம்மணி தன் மனைவியாக இருந்தாலோ தங்கையாக இருந்தாலோ இப்படி நியாயம் தேடும் பெண்ணியவாதிகள் எங்கே போய் தலையை மறைத்துக்கொள்வார்கள் என்று தெரியவில்லை.
Ammani is just a deviation. Just a character unfit for
the present society.
ரொம்ப புளகாங்கிதம் அடைய அவள் பெரிய கதாப்பாத்திரம் இல்லை.
அப்படி புளகாங்கிதம் அடைய விரும்புவது ஆண்களாகவே இருப்பார்கள். அதில் பெரும்பான்மையானவர்கள் தனக்கொருத்தி இப்படி கிடைத்தால் நன்றாக இருந்திருக்குமல்லவா என்று நினைக்கும் ரகமாத்தான் இருப்பார்கள்.
-------
No comments:
Post a Comment